தேசிகனின் இந்தப் பதிவை வாசித்தவுடன், என் ஞாபகத்தில் பளீரிட்ட 1/3 டஜன் அனுபவங்களை (என்னுடையது அல்ல!) பகிர்ந்து கொள்கிறேன்.
1. அபிராமி, அபிராமி!
நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் (எழுபதுகளில்), அபிராமி தியேட்டரில் (என்று நினைக்கிறேன்) லிசா என்ற மலையாளப் பேய்ப்படம் திரையிடப்பட்டது. அப்போது நடைபெற்றதாகக் கூறப்படும் திகில் சம்பவம் (புரளியா என்று தெரியாது!) நன்றாக இன்னும் நினைவில் உள்ளது. அதைக் கூறி, இரவு வேளைகளில் பலரை பயமுறுத்தி இருக்கிறேன்.
அந்தப் படத்தை நைட்ஷோ பார்க்க சென்றிருந்த இரண்டு இளம் சகோதரர்களில் ஒருவருக்கு படம் ஓடிக் கொண்டிருந்தபோது அவசரமாக "அது" (படக்காட்சிகள் ஏற்படுத்திய கிலியில்) வர, டாய்லெட்டுக்கு ஓடினார். டாய்லெட்டில் யாரும் இல்லை. இயற்கை உபாதையை சரி செய்து கொண்டு, கை அலம்பும்போது, மேலேயிருந்து தலையில் ஏதோ சொட்டவே, மேலே பார்த்தவர், சப்தநாடியும் ஒடுங்கிப் போய் விட்டார். உத்திரத்தில் ஒரு பிளவிலிருந்து ஒரு மனிதக் கை, ரத்தம் சொட்ட, தொங்கிக் கொண்டிருந்தது.
பீதியான அவர், இருக்கைக்கு வந்து, தன் சகோதரரிடம் மேட்டரை ரகசியமாகக் கூறி, தனக்கு மிகவும் பயமாக இருப்பதாகவும், உடனே கிளம்ப வேண்டும் என்றும் கூறினார். "வா, அது என்னவென்று பார்த்து விட்டு, தியேட்டர் மேனேஜரிடம் கம்பிளெயிண்ட் பண்ணலாம்" என்று அடுத்தவர் கூறியதற்கு, "கை"யைப் பார்த்தவர், "அதெல்லாம் வேண்டாம், நம்மைக் குடைந்து விடுவார்கள், சீக்கிரம் போகலாம்" என்று அவரை இழுத்துக் கொண்டு வெளியே வந்தவரை பார்த்து, தியேட்டர் வாட்ச்மேன், " என்ன, தம்பிகளா, படம் பார்க்க பயமா இருக்கா, இந்த மாதிரி படத்துக்கெல்லாம் சின்னப்பசங்க நைட்ஷோ வரலாமா?" என்று விவரம் புரியாமல் கடுப்படித்தார்.
சாலை இருட்டாக இருந்தது. சாலை ஓரத்தில் ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் அதன் ஓட்டுனர் முக்காடு போட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பி, "நாங்க எக்மோர் போகணும் வரீங்களா?" என்றவுடன் அவர் குளிருக்கு முண்டாசு கட்டிக் கொண்டு, போட்டிருந்த ஜிப்பாவை நன்றாக இழுத்து விட்டுக் கொண்டு, "போகலாங்க, ஒரு 10 ரூபாய் கொடுத்துடுங்க" என்றார்.
கொஞ்ச தூரம் ரிக்ஷா போனவுடன், ரிக்ஷாக்காரர் கரகரப்பான குரலில், "என்ன தம்பிகளா ? பாதிப் படத்துலேயே வந்துட்டீங்க போல தெரியுது, ஏதாவது சீன் பார்த்து பயந்துட்டீங்களா?" என்று கேட்கவே, இளவயசுக்காரர், தான் டாய்லெட்டில் பார்த்ததை விலாவாரியாகக் கூறியவுடன், திரும்பிய ரிக்ஷாக்காரர், "இந்தக் கையா, பாருங்க?" என்று ஜிப்பாவிலிருந்து தன் இடது கையை உருவிக் காட்டினார், ரத்தம் தோய்ந்த டாய்லெட்டில் பார்த்த அந்தக் கை போலவே! ரிக்ஷாக்காரருக்கு, முகம் இருக்க வேண்டிய இடத்தில், ஒரு கருப்பு வட்டம் மட்டுமே இருந்தது!!!!
குலை நடுங்கிப் போன சகோதரர்களில் ஒருவர், ஸ்பாட்டிலேயே அவுட்! இந்த சம்பவம் உண்மையிலே நடந்ததா என்றெல்லாம் நான் இதுவரை செக் பண்ணவில்லை!
2. லாலி ரோட் to GCT
கல்லூரியில் படித்த காலத்தில், இரண்டு அம்மாஞ்சிகள் (சந்திரசேகர், பத்து என்ற பத்மநாபன்) என் கூடப் படித்தார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட திகில் அனுபவம் இது. செவ்வாய் கிழமைகளில் ஹாஸ்டல் மெஸ்ஸில் ghee rice என்ற வாசனை (நாற்றம்!) மிக்க உணவு ஒன்றை டின்னருக்கு வழங்குவார்கள். சந்திராவுக்கும், பத்துவுக்கும் அது ஆகவே ஆகாது. அன்று, இருவரும், ரத்ன விநாயகர் கோயிலுக்கு அருகே உள்ள அன்னபூர்ணா சென்று ஒரு வெட்டு வெட்டி விட்டு (Dutch முறை தான்!) காலாற ஆர்.எஸ்.புரத்திலிருந்து நடந்து வருவார்கள்.
லாலி ரோடு ஜங்ஷன் என்ற நாற்சாலை சந்திப்பிலிருந்து (ஒரு பக்கம் போனால் GCT, இன்னொரு பக்கம் போனால் மருதமலை) GCT கல்லூரி வரை செல்லும் சாலையில், தெரு விளக்குகள் இல்லாததால், மரங்கள் அடர்ந்து இரவு வேளைகளில் இருட்டாக இருக்கும். ஒரு சமயம், இரவு மணி பத்து இருக்கும். அன்னபூர்ணாவில் டின்னர் முடித்து விட்டு, பயத்தைப் போக்க கந்தசஷ்டி கவசம் சொல்லிக் கொண்டே, இருவரும் 'லாலி ரோடு to GCT' நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது, பின்னால் ஏதோ ஆளரவம் கேட்டது. அமாவாசையால் கும்மிருட்டு வேறு. பத்து, "யாரது?" என்று வினவ, ஒரு கிழவியின் குரல், "தம்பிகளா, நான் ஸ்ரீவள்ளி டாக்கீஸ் கிட்ட போகணும், கொஞ்சம் வழி சொல்லுவீங்களா?" என்றவுடன், பயம் தெளிந்த பத்து, "பாட்டி, இப்டியே நேரா, காலேஜ தாண்டிப் போனா, ஒரு டீக்கடை வரும். அங்க கேட்டா சொல்லுவாங்க" என்று கூறி விட்டு இருவரும் நடக்க மீண்டும் ஆரம்பித்தார்கள்.
பின்னாடியே கிழவியும் நடந்து வந்து கொண்டிருந்தாள்! சந்திராவுக்கு ஏதோ பொறி தட்ட(!), மிக வேகமாக நடக்கத் தொடங்கினான், பத்துவும் தான்! பின்னால் கிழவியும் மிக வேகமாக நடந்து வரும் அரவம் கேட்டபடி இருந்தது. இருவரும் பீதியடைந்து, முதலில் மெதுவாக பின்னர் வேகமாக ஓட ஆரம்பிக்க, பின்னால், கிழவியும் ஓடி வரும் அரவம் தொடர்ந்தது!!! தலை தெறிக்க ஓடிய இருவரும், கல்லூரி கேட் அருகில் இருந்த வெளிச்ச பிரவாகத்திற்கு வந்து, திரும்பிப் பார்க்க, பின்னால் யாரும் இல்லை!
இருவருக்கும் அடுத்த 2 நாட்கள் கடுமையான காய்ச்சல், கிளாஸ¤க்கு வரவில்லை. இந்த திகில் கதையை, பார்க்க வந்த எல்லாரிடமும் மாய்ந்து மாய்ந்து சொல்லி, நல்ல பிரபலம் அடைந்தனர் :)
3. தள்ளாதே! என்னைத் தள்ளாதே!
கல்லூரி நண்பன் ஷியாம் சுந்தர், கல்லூரி கிரிக்கெட் டீமின் கேப்டன், தைரியமானவனும் கூட! நாங்கள் தங்கி இருந்த விடுதியின் தரைத்தளத்தில் இருந்த இடது பக்க டாய்லெட் அறை ஒன்றில் பல வருடங்களுக்கு முன் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக ஒரு விஷயம் கேள்விப்பட்டதால், இரவு நேரத்தில், யாரும் அங்கு செல்ல மாட்டார்கள். விளக்கு வேறு கிடையாது.
ஷியாமின் அறை தரைத்தளத்தில் தான் இருந்தது. ஒரு நாள் காலை இரண்டு மணி வரை, engineering drawing போட்டு விட்டு, படுப்பதற்கு முன் சிறுநீர் கழிக்க (தூக்கக் கலக்கத்தில் மறந்து போய்) 'அந்த' டாய்லெட்டுக்கு செல்ல முற்பட்டான். உள்ளே நுழைந்தவனை யாரோ தள்ளி விட்ட மாதிரி இருந்தது. 'யாரோ வேண்டுமென்றே தள்ளி விடுகிறார்கள்' என்று எண்ணிய ஷியாம், "ஏய், தூக்கம் வருது, வெளயாடாதே" என்று சொல்லிக் கொண்டே, மீண்டும் உள்ளே நிழைய எத்தனித்தான், மீண்டும் ஒரு தள்ளு! கடுப்பான ஷியாம், "செருப்படி வாங்கப் போற" என்று கத்தியபடி, வேகமாக டாய்லெட்டில் நிழைய முற்பட, 'யாரோ' இன்னும் வேகமாக ஷியாமை தள்ளி விட, ஷியாம் டாய்லெட்டுக்கு வெளியே வந்து விழுந்தான்!!!
இப்போது ஷியாமின் சகலமும் விழித்துக் கொள்ள, தனது அறைக்கு ஓடிய ஷியாம், ஒரு 2 நாட்கள் எந்த டாய்லெட்டுக்கும் போகவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) மாவீரன் ஷியாமையே கதி கலங்க வைத்த "அது" குறித்த பேச்சு, கேம்பஸில் ரொம்ப நாட்கள் ஓடியது!!!
4. சொற்களில் சிக்காத பற்கள்!
என் கல்லூரி நண்பன் நாராயணன் (இவனது கீர்த்தி சிறியது, மூர்த்தி பெரியது, படிப்பு, விளையாட்டு, பேச்சுப்போட்டி என்று அனைத்திலும் கலக்குவான்!) தன் பங்குக்கு ஒரு "திகில்" கதை கூறினான். ஒரு சமயம், அவனது நண்பர்கள் இருவர், கோயமுத்தூரில் உள்ள பழைய ஸ்ரீநிவாஸா டாக்கீஸில், நைட் ஷோ பார்த்து விட்டு திரும்பிய போது, இருட்டான சாலையோரத்தில் (இரவு 2 மணிக்கு) ஒருவர் வேர்க்கடலை வறுத்துக் கொண்டிருந்தார்! நண்பன் ஒருவனுக்கு கடலை கொறிக்க ஆசை வரவே, வண்டி அருகில் சென்று, "ஒரு ரூபாய்க்கு கடலை கொடுங்க" என்று வாஞ்சையோடு வாணலியைப் பார்த்தவனுக்கு இதயமே நின்று விட்டது! வாணலியில் மணலோடு வறுக்கப்பட்டுக் கொண்டிருந்தவை மனிதப் பற்கள்!! அப்புறமும் நம் மக்கள் அங்கு நிற்பார்களா, எடுத்தார்கள் ஓட்டம், பின்னங்கால் பிடறியில் பட :)
Epilogue:
------------
நானும் என் பங்குக்கு "திகில்" அனுபவம் பெற, தைரியசாலி வேடமிட்டுக் கொண்டு, தன்னந்தனியாக வாடகை சைக்கிள் மிதித்துக் கொண்டு, கல்லூரிக்கு அருகே இருந்த முத்து டாக்கீஸ¤க்கும், சென்ட்ரல் தியேட்டருக்கும், பல முறை நைட் ஷோக்கள் சென்று வந்துள்ளேன்! படம் பார்த்து விட்டு, அகாலமான நேரத்தில் திரும்பி வரும்போது, சாலையோர முருங்கை மரங்களில் வேதாளமோ, புளிய மரங்களில் பேயோ/பிசாசோ தொங்குவதை ஒரு முறையேனும் பார்த்து விட்டால், நம் ஜென்மமும் 'திகில்' சாபல்யம் அடையுமே என்று ஏங்கி பரிதவித்தது தான் மிச்சம்!!! நைட் ஷோக்கள் போனதில், தூக்கமும் போச்சு, அந்த செமஸ்டரில் மார்க்கும் போச்சு :) நமக்கெல்லாம் எதுக்கும் கொடுப்பினை கிடையாதுங்க :))))
தங்கள் (அல்லது) தாங்கள் கேள்விப்பட்ட "திகில் அனுபவங்களை" பகிர்ந்து கொள்ள நான் அழைக்க விரும்பும் நண்பர்கள்:
1. தேசிகன்
2. பினாத்தல் சுரேஷ்
3. டோண்டு ராகவன்
4. ஹாய் கோபி
5. நாமக்கல் சிபி
6. உஷா ராமச்சந்திரன்
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 331 ***